Tamil Radios by Puthiyayukam

Tamil Radios 50+ Online Radio

CHOOSE YOUR SONGS AND RADIO

Submit your Radio/FM to puthiyayukam@gmail.com


 சமூகநேயம் மிக்க கல்வியாளரும், இலக்கிய ஆர்வலருமான இரா.சிவசந்திரன் 

-க.சட்டநாதன்

                 
              வேலணையூர் தந்த கல்வி மான்களில் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்கள், முதன்மை வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். 

             கல்வி கேள்விகளில் சிறந்த குடும்பப் பின்னணி அவரை தகைசால் கல்வியாளராக ஆக்கியதில் வியப்பேதுமில்லை. அவருடைய தந்தையார் 'இறைமணி' சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் அவர்களும், தாயார் திருமதி உருக்குமணி இராசரத்தினம் அவர்களும் நல்லாசிரியர்கள். இவரது உடன்பிறப்புகளும் ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும், வங்கியாளர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் கடமையாற்றி நற்பெயர் பெற்றவர்கள்.

              இந்தப் பின்னணி இரா.சிவசந்திரன் அவர்களைப் புடம்போட்டதோடு, கசடறக் கற்ற புலமையாளராகவும் ஆக்கியுள்ளது.
              இவர் தனது ஆரம்பக் கல்வியை வேலணை சரஸ்வதி வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை வேலணை மத்திய மகா வித்தியாலயம், செங்குந்தா இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றிலும் கற்றார்.

              தனது பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், பட்ட மேற்படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.
              புவியியற் பாடத்தில் அதிக பிரீதியும் நாட்டமும் உள்ள இவர், தனது பட்டப்படிப்புக்கு அப் பாடத்தினையே சிறப்புப் பாடமாகப் பயின்று, உயர்சித்தி பெற்றார். அவர் பட்ட மேற்படிப்புக்கு எடுத்துக் கொண்ட ஆய்வு விடயங்கள் 'வன்னிப்பிரதேச விவசாயம்' மற்றும்  'மலையகத் தமிழர் சமூக பொருளாதார நிலை' என்பனவாகும்.

              கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் தனது பல்கலைக்கழக ஆசிரியப் பணியை ஆரம்பித்த இவர் உதவி விரிவுரையாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், களனிப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.
             
 எண்பதுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வந்த இவர், பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெறும் காலம் வரை விரிவுரையாளராக, சிரேஸ்ட விரிவுரையாளராக, பேராசிரியராக, புவியியற்துறைத் தலைவராக, கலைப்பீடாதிபதியாக பல்வேறு நிலைகளில் கடமையாற்றி உள்ளார்.

              பல்கலைக்கழக ஆசானாக இவரது பணி மகத்தானது. மாணவர்களிடம் தோழமையுடன் பழகும் இவர், அதேசமயம் கண்டிப்பு மிக்கவராகவும் இருந்தார். மாணவர்களது ஆய்வு மனப்பாங்கை இனங்கண்டு அவர்களை வழிநடத்தியதோடமையாது, பாடப்புலத்துக்கு அப்பாற் சென்று, அவர்களை நற் சமூக மனிதர்களாக, சக மனித நாட்டமுள்ளவர்களாக, கற்ற தொழுகும் பண்பாளர்களாக ஆக்கியமை இவரது பணிகளுள் தலையாயது என்று கூறலாம்.
              இவர் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் இன்னொரு அரும்பணியையும் ஆற்றியுள்ளார். புறநிலைப் படிப்புகள் அலகு என்ற துறையை  திட்டமிட்டு, ஒருங்கமைத்து பல்வேறு துறைசார் புலமையாளர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பெற்று அவர்கள் துணையுடன் ஏறக்குறைய 30 அடிப்படைக் கற்கை நெறிகளை  ஒழுங்குபடுத்தி; நடாத்தியுள்ளார். இப் பணி சமூக நோக்குச் சார்ந்த ஒன்றாகும. வகுப்புகளில் பல்தொழில் சார் விரிவுரைகள் நடந்தன. பல்வேறு தரப்பினுள்ளவர்கள், குறிப்பாக அதிக கல்விப்புலமை இல்லாதவர்கள் இவ் வகுப்புகளில் கலந்து பயனடைந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை பல்கலைக்கழகம் வந்து வகுப்புகளில் கலந்து கொண்டமை பெரிய விஷயமாகவே இருந்தது.  சமூகத்துடன் பல்கலைக்கழத்தை இணைத்ததில் இவ் அலகு பெரும் பங்காற்றியது.  குறித்துரைக்கத்தக்க சில அடிப்படை கற்கை நெறிகளென சிலவற்றை குறிப்பிடலாம். புகைப்படக் கலை, அலுவலக முகாமைத்துவம், அடிப்படை ஆங்கிலம்,  பொது வாழ்வுக்கான பிரயோகப்பொறியியல். உணவகங்களின் முகாமைத்துவம், இதழியல், உளவளத்துணை, சுக வாழ்வு, சைவ சித்தாந்தம். மேற்படி கற்கை நெறிகளில் பங்குபற்றியதன் மூலம் சமூகத்தில் இருந்து பலர் பயன்பெற்றதோடு இது எமது பல்கலைக்கழகம் என்ற மனப்பாங்கை வளர்த்து சமூகத்தையும், பல்கலைக்கழகத்தையும் ஒன்றிணைக்க வழி கோலியது. 

              பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தும் அதன் பின்னரும் இவர் ஆர்வம் காட்டியது எமது பிரதேச வளங்களையும், சமூக மேம்பாட்டையும் வளர்த்தெடுக்கும் ஆய்வுத் துறையாகும்.

             இவரது பலதரப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சர்வதேச ஆய்வுச் சஞ்சிகைகளிலும், உள்ளுர் ஆய்வுச் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவரது ஆய்வில் முதன்மை பெற்ற விடயங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களின் வளங்களுடனும்,  மக்கள் வாழ்வுடனும்   தொடர்பு கொண்டவையாகும். நிலவளம், நீர்வளம்;;, குடியிருப்பின் தோற்றம் வளர்ச்சி, குடிப்பெயர்வுகள், விவசாய மேம்பாடு,  சூழல் மேம்பாடு போன்றவற்றை கட்டுரைகள் ஆய்வுசெய்தன. மற்றும் மலையகத் தமிழர் சமூக பொருளாதார நிலை பற்றியும் இவரது ஆய்வுக்கட்டுரைகள் பேசுகின்றன. 

             பல்வேறு சந்தர்ப்பங்களில் உதயதாரகை, வீரகேசரி, தினகரன், ஈழநாடு, ஈழமுரசு, தினக்குரல், திசை ஆகிய தினசரிகளிலும், மல்லிகை, ஊற்று, நங்கூரம், தமிழ்க்கலை, ஆகிய சஞ்சிகைகளிலும் இலகுதமிழில் பலரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பல கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அக் கட்டுரைகளும் சமூகப் பயன்பாடு மிக்கவையாகும்.

             சிவாவிடம் ஒரு பத்திரிகையாளனின் மலைப்பு ஊறலிப்பாய் இருந்தமையால்  தான் காலாண்டு இதழான 'அகிலத்தின்' ஆசிரியராகவும், அறிவியல் இதழான ஊற்று, இலக்கியச் சஞ்சிகையான பூரணி ஆகியவற்றில் உதவி ஆசிரியராகவும் அவரால் பணியாற்ற முடிந்திருக்கிறது.

             ஏலவே கூறியவை சிவசந்திரனின் ஒருமுகம் எனின், அவரது ஆளுமை விகசிப்பின் இன்னொரு முகம் அவரது கலை இலக்கியம் சார்ந்த ஆர்வங்களாகும்.

            இவர் கால்பதித்த ஆக்க இலக்கியத் துறைகளாக சிறுகதை, நாடகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 

            மிகவும் இளமையில் எழுத ஆரம்பித்த இவர் 1965 தொடக்கம் 1976 வரை இருபது கதைகளையே எழுதியுள்ளார். இச்சிறுகதைகள் அவரது புனைவாற்றலைக் கோடிட்டுக் காட்டுபவையாக அமைந்துள்ளன. வடிவ அமைதி கொண்டுள்ள இக்கதைகளில், இயல்பான மொழிநடையும் துல்லியமான பேச்சுவழக்கும் அமைந்துள்ளன.

            குறிப்பாக இவரது புனைவுகள் ஒருவகை லட்சியப் பிடிப்புடன் வாழ எத்தனிக்கும் மனிதர்களைக் காட்ட முயற்சிக்கின்றன. அந்த மனிதர்கள் எத்தகைய புறச்சூழலோடும் எதிர்ப்புத்தன்மை ஏதுமில்லாமல் இசைந்து போகக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

            இவர் காமம் சார்ந்த விஷயங்களை தமது கதைகளில் மிக நுட்பமாகவும் விரசம் ஏதுமில்லாமலும் சொல்லிவருவதில் சமர்த்தராக இருக்கிறார்.
           மனோரதியக்கசிவு இவரது கதைகளில் விரவிவருவதற்கான காரணம் இல்லாமலில்லை. கதைகள் எழுதிய காலம் இவரது இளமைக் காலமாகும். அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

           சிவாவினுடைய நாடகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பமோ, பிரதிகளை படிக்கும் வாய்ப்போ எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அந் நாடகங்கள் பெற்ற வரவேற்பும் பரிசில்களும் ஓர் அங்கீகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றிய 'துடிக்கும் இதயங்கள்' 'விட்டில்' ஆகிய நாடகங்கள் பற்றி எழுபதுகளில் பயின்ற மாணவர்கள் வியந்து பேசியதை நான் கேட்டிருக்கின்றேன். 

            இலக்கியம் சார்ந்து அவர் மேற்கொண்ட இன்னொரு முயற்சி கலைத்தரம் மிக்க திரைப்படங்களை பார்வையாளர்களுக்கு இலவசமாக காட்சிப்படுத்தியமையாகும்.

          யாழ் பல்கலைக்கழக புறநிலைப்படிப்புகள் அலகின் இணைப்பாளர் என்ற வகையில் திரைப்பட வட்டம் ஒன்றை அமைத்து அவரால் செயற்பட முடிந்தது.            திரையிடப்பட்ட படங்கள் வீடியோத் திரைப்படங்களாக இருந்த போதும் அவை பயனுடையவை.

            இத் திரைப்பட வட்டம் உலகத்தரம் வாய்ந்த திரைப்பட மேதைகளின் படங்களைத் திரையிட்டது. உதாரணங்கள் சில, பதர் பாஞ்காலி, அகான்துக், அபராஜிதோ, சத்கதி, வுhந உhநநள pடயலநசள, மந்தன், மம்மூ, சுபைதா, பரோமா, திரு திருமதி ஜயர், தேசதானம், பயங்கரவாதி, கம்பெரலியா, பியானோ வாசிப்பவன், பேர்னாட்டா அல்பாவின் வீடு, கரும்பலகைகள், னுயnஉந றiவா வாந றiனெஇ தபாற்காரன், லரிசா, வுhந நயசவாஇ வாந கசைநஇ வுhந றயவநச. இவற்றுடன் தரமான தமிழ்த் திரைப்படங்களும் காட்டப்பட்டன.

           சிவா தனது கல்விப் பணிகள், கலை இலக்கிய முயற்சிகளுக்கு அப்பால் தன்னை ஒரு பூரணமான சமூக மனிதனாகவே இனங்காட்டிக் கொண்டுள்ளார். அவ்வகையில் அவரது பணிகள் குறிப்பிட்டு கூறக்கூடியனவாகும்.

           பல்கலைக் கழகத்திலும் மற்றும் பல பொது நிறுவனங்களிலும் பல்வேறுபட்ட நிலைகளில் தலைவராக, உப தலைவராக, பொதுச் செயலாளராக, செயலாளராக, உப செயலாளராக, பொருளாளராக, மாணவ ஆலோசகராக செயற்பட்டு வந்துள்ளார். வருகிறார்.

             தற்பொழுது ஆய்வு, அபிவிருத்தி மையமான சிந்தனைக்கூடத்தின் பணிப்பாளராக பணியாற்றி வரும் இவர் 'நூலகம்'  எனும் எண்மிய இணையத்தளத்தின் செயற்பாடுகளிலும் கணிசமான பங்களிப்பினை நல்கி வருகிறார்.
             இம் முயற்சிகளின் பரிணாம நகர்வு தான் இவரை தமிழ்மொழி மீதும், தமிழ்த்தேசியத்தின் மீதும் பற்றுறுதியுள்ள அரசியல் வாதியாக நமக்கு இனங்காட்டியுள்ளது. 'கண்டதுகள் நிண்டதுகள்' அல்ல கற்றறிந்தோர் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும் என்பது இவரது வேணவா. அது நிறைவேற வேண்டும்! அது நிறைவேறும்.

             சிவாவின் இப்பணிகளுக்கு உடனிருந்து உதவுபவர் அவரது இனிய தோழியும் துணைவியுமான சரோஜா சிவசந்திரன் ஆவார். மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளராகச் செயற்படும் அவர் கூட மிகச்சிறந்த சமூக நலம் பேணும் சேவகியாவார். இவரது  மகளிர் அபிவிருத்தி நிலையம் குறிப்பாக பெண்களின் சமூக மேம்பாடு, சமத்துவம், அவர்தம் உரிமைகள் சார்பான கருத்தரங்குகளை நடாத்துவதோடு பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. அத்துடன் 'நங்கை' எனும் சஞ்சிகையையும் பெண்கள் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு வெளியிடப்பட்டு வருகிறது.

             சிவாவினுடைய பிள்ளைகள் இருவர், மகள் யாழினி அரவிந்தன் பல்வைத்தியராக கனடாவில் பணியாற்றி வருகின்றார். மகன் பாரதி கணனிப் பொறியியலாளராக கொழும்பில் வேலை பார்க்கிறார்.

             சிவாவிடம் தமிழ் மக்களும், தமிழ் இலக்கிய உலகத்தினரும் நிறையவே எதிர்பார்க்கிறார்கள். அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றும் ஓர்மமும், மனப்பக்குவமும் அவரிடம் போதியளவு உண்டு.   



0 comments:

Post a Comment