Tamil Radios by Puthiyayukam

Tamil Radios 50+ Online Radio

CHOOSE YOUR SONGS AND RADIO

Submit your Radio/FM to puthiyayukam@gmail.com


மீண்டும் அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா
மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க நம்பகத் தன்மைவாய்ந்த நடவடிக்கையில் சிறிலங்கா இறங்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வொசிங்டனில் நேற்றுமுன்தினம் நடத்திய நாளாந்த செய்தியாளர் சந்திப்பிலேயே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் நம்பகமான விசாரணைகளை நடத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஜெனிவாவில் உள்ளமனிதஉரிமைகள் பேரவைக்கு ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்துள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே மார்க் ரோனர் இவ்வாறு கூறியுள்ளார
*******************

பொல்லுக் கொடுத்த ஸ்ரீலங்கா!
சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் பலவற்றை சிறிலங்கா அரச தொலைக்காட்சி மூலமே மேற்குலகம் திரட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தியதையும் சிறிலங்கா மீதான போர்க்குற்றங்களில் ஒன்றாக ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கமே தாக்குதல் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்த பின்னரும் பொதுமக்கள் மீது பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளதற்கான ஆதாரங்களை அரசாங்கத் தொலைக்காட்சியே வழங்கியுள்ளது.
இதுபற்றிய தகவல் பரிமாற்றக் குறிப்பு ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
2009 மார்ச் 11ம் நாள் கொழும்பில் இருந்து அமெரிக்கத் தூதுவர் பிளேக் அனுப்பிய சிறிலங்கா நிலைமைகள் குறித்த 29வது அறிக்கையில் இதுபற்றிய தகவல் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.
2009 மார்ச் 10ம் நாள் பாதுகாப்பு வலயத்தில் பலத்த பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுவதாகவும், அன்றைய நாள் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 254 பேர் காயமுற்றதாகவும் ஐ.நா பிரதிநிதி தமக்குத் தெரியப்படுத்தியதாகவும் பிளேக் அனுப்பிய தகவலில் கூறப்பட்டுள்ளது.
அன்றைய நாள் பாதுகாப்பு வலயத்தில் மிகமோசமான நாள் என்று பிளேக் தனது அறிக்கையில் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறுகின்றது.
ஆட்டிலறிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை நிறுத்தி விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு வாக்குறுதி கொடுத்திருந்த போதும்- புலிகள் நிலைகள் மீது சிறிலங்காப் படையினர் ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தும் காணொலிக் காட்சியை அரச தொலைக்காட்சி அன்றைய நாளும் ஒளிபரப்பியுள்ளதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐரிஎன் தொலைக்காட்சியில் இந்தக் காணாலி ஒளிபரப்பப்பட்டதாகவும், இது பற்றி மறுநாளான மார்ச் 12ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்திக்கும் போது எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
*******************

பதறியடிக்கும் வாய்சொல் வீரர்கள்!
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை இராஜதந்திர சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி அமெரிக்க நீதிமன்ற வழக்கில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியும், சீதாராம் சிவம் என்பவரும் நியுயோர்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியிருந்தார்.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், இது விடுதலைப் புலிகளின் கொடூரச்செயல்களை அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் அம்பலப்படுத்தும் வாய்ப்பை தந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை எதிர்கொள்ள சவீந்திர சில்வாவுக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படும் என்றும், சிறிலங்காவின் நியாயங்களை எடுத்துக் கூறும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் சிறிலங்கா அரசின் தரப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
ஆனால் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர சிறப்புரிமைப் பாதுகாப்பு இருப்பதாகவும் அவரைப் பாதுகாக்க ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் இராஜதந்திரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக, நியுயோர்க்கில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது எனவும், அவருக்கு தண்டனை விதிக்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா மற்றும் வியன்னா பிரகடனங்களின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு முழுமையான இராஜதந்திர பாதுகாப்பை அளிக்க வேண்டியது ஐ.நாவின் கடமை, சிறிலங்காவைப் பிரதிநிதித்துவம் செய்யும் இராஜதந்திரியான அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஐ.நா மற்றும், அமெரிக்காவுக்கு இருப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியுயோர்க்கில் தமது கடமைகளை தடையின்றி மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனைச் சந்தித்த போது கேட்டுக்கொண்டதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா வழக்கை எதிர்கொள்வார் என்று கூறிய சிறிலங்கா அரசாங்கத் தரப்பு, தற்போது ஐ.நாவின் பாதுகாப்பைக் கோரியிருப்பது இந்த வழக்கை எதிர்கொள்வதற்கு தயங்குவதையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
*******************

திண்டாடும் போர்க்குற்றவாளிகள்!
ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவுக்கு எதிராக நியூயோர்க்கில் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பாக ஐ.நா தூதுவர் பிரிவின் அறிவிப்பு இலங்கை வெளிவிவவகார அமைச்சுக்கு இன்று கிடைக்கலாம் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற்றும் அவருக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அனுப்பியுள்ள அழைப்பாணை என்பவற்றை தாம் கவனத்தில் எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் வழங்கும் இராஜதந்திரிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வியன்னா உடன்படிக்கை கூற்றுக்கள் என்பன சவேந்திர சில்வாவிற்கு தனது கடமையை சிக்கலின்றி ஆற்ற உதவி புரியும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியன்னா உடன்படிக்கை 1961 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 186 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் சரத்து 29 இன்படி குறித்த நாடொன்றில் இருக்கும் இன்னொரு நாட்டின் இராஜ தந்திரிகளுக்கு எதிரான பிடியாணை செல்லுபடியாகாது என கூறப்பட்டுள்ளது.
*******************

கனாடாவின் அதிகரிக்கும் அழுத்தம்
கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயர்ட் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரீஸைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா.சபையின் 66வது வருடாந்த மாநாட்டிலேயே இச் சந்திப்பு இடம்பெறறுள்ளது.
இரு தரப்பு உறவுகள் சம்பந்தமான சம்பிரதாயபூர்வமான இச் சந்திப்பில் கொமன்வெல்த் அமைப்பு, ஜனநாயகம், மனிதவுரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்கு பேணல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கனடிய வெளிவிவகார அமைச்சர் சிறீலங்கா அரசு இணங்களிற்கிடையேயான உறவை மீளக் கொணரும் நடவடிக்கையில் உத்வேகமாகச் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்ததோடு தகுந்த வரையறைகள் நேர்மையான அணுகுமுறைகள் என்பன பற்றிய அக்கறையின்மை குறித்துக் கவலையையும் தெரிவித்தார்.
மேலும் கனடிய வெளிவிவகார அமைச்சர் கனடியப் பிரதமர் காப்பர் சிறீலங்காவில் 2013ல் வைக்கவுள்ள கமான்வெல்த் மாநாடு பற்றிய கரிசனையை வெளியிட்டதையும் சுட்டிக் காட்டியதையும் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை கனடிய வெளிவிவகார அமைச்சர் பயாட் இலங்கையில் போரில் ஈடுபட்ட இரு தரப்பும் புரிந்த மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான சுதந்திர விசாரணைக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
*******************

கனேடிய பாராளுமன்றதில் இன்று
அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தை கனேடியப் பாராளுமன்ற வளாகத்தில் திரையிட மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி இன்று புதன்கிழமை 28 ஆம் திகதி கனேடிய நேரப்படி மாலை 6 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இக்காணொளியை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களும் ஊடகங்களும் மாத்திரமே காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
*******************

தேர்தல் கால முறைப்பாடுகள்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரச உடைமை பயன்படுத்தப்படுவது குறைவடையவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அறிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்துக்கு அரச உடைமைகள் பயன்படுத்துவது தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்து செல்வதாக பல்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளின் போது அரச உடைமைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் இதுவரை 14 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இதுவரையில் தேர்தல் தொடர்பான 58 வன்முறைச் சம்பவங்கள் பவ்ரலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 7 தாக்குதல் சம்பவம் எனவும் 6 மக்களை அச்சுறுத்தியது தொடர்பிலானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பொதுமக்கள் அச்சுறுத்தல்கள் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளும் கொலன்னாவ பகுதியிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
*******************

தொடரும் குழப்பங்கள்
மக்கள் விடுதலை முன்னணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கட்சியின் மாநாட்டை விரைவில் கூட்டத் தயார் என அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியிக்குள் உள்ளகச் சிக்கல் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
வருண தீப்தி ராஜபக்ஷ், புபுது ஜாகொட மற்றும் திமுது ஆர்டிகல ஆகிய மூத்த உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகியதை அடுத்தே கட்சியிக்குள் இவ்வாறான சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு இதுவரையில் கட்சியின் தலைமைக்கு அவர்களது வெளியேற்றம் குறித்து அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பின், குறித்த மூன்று உறுப்பினர்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு எதுவித மறுப்பும் தெரிவிக்கையில்லை.
அதனால் கட்சியின் மத்திய செயற்குழு ஒன்றுகூடி குறித்த உறுப்பினர்கள் குறித்து கலந்துரையாடி ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என சோமவன்ச குறிப்பிட்டார்.
இதேவேளை, கட்சியின் மத்திய செயற்குழுவில் பிளவுகள் காணப்படுவதாகக் கூறப்படும் கருத்தினை அவர் மறுத்துள்ளார்.
அத்தோடு பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கட்சியின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கையெழுத்திட்ட கடிதமொன்றை கட்சியின் தலைமைத்துவதிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படும் செய்தியினையும் சோமவன்ச மறுத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது விலகிச் செல்பவர்கள் உட்பட்ட மத்திய செயற்குழு கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில் கட்சி மாநாடு குறித்து கலந்துரையாடியதாகக் குறிபட்ட அவர், அப்படியிருக்க வேறொரு கடிதங்களும் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மத்திய செயற்குழுவானது இறுதியாக சந்தித்த தினத்திலிருந்து மூன்று மாதத்துக்குள் மீண்டும் சந்திக்க வேண்டும் என கட்சியின் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களில் வெளியாகும் கட்சி குறித்த தகவலை அடுத்து மாகாண ரீதியிலான உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியில் 1994ம் ஆண்டு தொடக்கம் சிறுபிளவு காணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கட்சிக்குள் விரிசலுடனான ஒரு உறவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
*******************



0 comments:

Post a Comment