Tamil Radios by Puthiyayukam

Tamil Radios 50+ Online Radio

CHOOSE YOUR SONGS AND RADIO

Submit your Radio/FM to puthiyayukam@gmail.com

"ஆயிரத்தில் ஒருவன்" ஒரு தமிழீழ முழக்கம் 

செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ஆயிரத்தில் ஒருவன் திரைப் படத்தை தமிழ் திரையுலகின் புதிய சிகரம் என்றே சொல்லுவேன் நான்

வழக்கமாக தனது பாணியில் , இன்றைய 18 வயசு இளசுகளின் நவீன , காமம் கலந்த காதலை கொஞ்சம் வன்முறையான பூச்சில் சொல்லி கடைசி பதினைந்து நிமிடத்தில் உணர்வுக்குவியலைக் கொட்டி நம்மை நெகிழ வைத்து திருப்தி செய்யும் வித்தையிலேயே இந்த முறையும் ஜொலித்திருப்பார் செல்வராகவன் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் படம், பார்த்த பின்புதான் செல்வராகவன் நிஜமாகவே எவ்வளவு பெரிய கலை மேதை என்பதும் அதைவிட முக்கியமாக எவ்வளவு பெரிய தமிழ் இன உணர்வாளன் என்பதும் புரிய எனது இதயத்தில் ஒரு கம்பீரச் சிங்கமாய் வீற்றிருக்க ஆரம்பித்து விட்டார் செல்வா.

பிரபாகரன் மரணத்தையும் ஈழ போராட்டததையும் வெள்ளித் திரையில் கம்பீரமாக சுமார் 1000 ஆண்டு தமிழின வரலாற்றோடு சேர்த்து (குறியீடாகவே) மிக உயர்ந்த தரத்தில் பதிவு செய்தது செல்வா என்ற பெருமையைக் காலத்தால் அழிக்க முடியாது.

தொல்பொருள் ஆய்வுத் துறை....., வியட் நாம் அருகே உள்ள தீவுப பக்கம ஒரு ஆராய்ச்சிக்குப் போய் காணாமல் போகும் பேராசிரியர்....., அவரைக் கண்டுபிடிக்க விரும்பும் மகள் .... ஆராய்ச்சி ஆர்வம் கொண்ட ஒரு சகலகலாவல்லி பெண் அதிகாரி .....,அவளுடன் கருத்தொத்த ஒரு கம்பீரமான முன்னாள் ராணுவ அதிகாரி , எடுபிடி வேலைக்காக மதுரையில் இருந்து மண் மணம் மாறாத 30 ஆட்கள் ......என்று இன்றைய கால ஹாலிவுட் படங்களுக்கு இணையாகத் துவங்கும் படம் ,போகப் போக ஹாலிவுட் படங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் அளவுக்கு கருத்தியலின் உச்சம் தொடுகிறது.

3000 ஆண்டுகளாக தமிழன் சேர . சோழ , பாண்டியன் என்ற பிரிவினையில் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு செத்ததன் நவீன கால நீட்சியாக கதை சொல்லி இருக்கும் செல்வாவுக்கு ஒரு அழுத்தமான கை குலுக்கல்.( நவீன கால சூழலில் சேரனை லாவகமாக கதையில் இருந்து தவிர்த்திருக்கும் இன ரோஷத்துகுப் பாராட்டுக்கள்)

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்..... சோழ பாண்டியப் போர் ....! சோழ அரசன் தனது மகனின் உயிரைக் காப்பாற்ற அவனை கடல்கடந்து அனுப்புகிறான் . அதோடு பாண்டியர்களுக்குச் சொந்தமான குலதெய்வச் சிலை ஒன்றையும் சோழ இளவரசனிடம் கொடுத்து அனுப்புகிறான். அது மீண்டும் பாண்டியர் வசம் கிடைக்கக் கூடாது என்பதற்காக .வியட்நாம் சென்று பல தீவுகளுக்கு அப்பால் சென்று காடு, மலை , நீர் , காற்று, மணல்,கொடிய விலங்குகள் , மனித மாமிசம் தின்னும் பழங்குடியினர் (இவர்கள் சோழனின் விசுவாசிகள் ) என்று எல்லா விதங்களிலும் ஆபத்துள்ள பாதை வழியே போனால்தான் அடைய முடியும் என்ற வகையில் ஒரு நிலப்பரப்பில் அதைக் கொண்டு சென்று இளவரசன் மறைத்து வைக்கிறான். அதைப் பின் தொடர்ந்து போன பாண்டிய தளபதி ஒருவன் அது குறித்து வரைந்து வைத்த வரைபடத்தின் துணையோடு இன்று இந்த நவீன குழு பயணப் படுகிறது . விபரீதமான பிரம்மாண்டமான ஆபத்துகளைக் கடந்து (படத்தில் பார்த்து பிரம்மியுங்கள்) ஒரு வழியாக சென்று அடைந்தால்.....

யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா......

அங்கு ஒரு சோழ சாம்ராஜ்யமே இன்றும் இருக்கிறது.அன்று போன சோழ இளவரசன் மற்றும் நண்பர்களின் வழிவந்த சமுதாயம்.! பழந்தமிழ் பேசிக் கொண்டு, காட்டுவாசித் தன்மைகள் ஒரு மாதிரிக் கலந்து அதே நேரம் பழந்தமிழர் முறைப்படியும் வாழ்ந்து கொண்டு .... அதே நேரம் உணவுப் பஞ்சத்துடன் ...

அவர்களுக்குத் தலைவனாக ஒரு சோழ தேவன்.. பற்பல காலமாய் வாழும் ஒரு வயது முதிர்ந்து பழுத்த மூப்பன்.

அங்கு போன பின் கதையே வேறு.

எல்லோரையும் அழைத்துப் போன அந்த சகலகலாவல்லியான பெண் அதிகாரி (ரீமா சென் )அந்தப் பாண்டிய அரசனின் வழிவந்தவள் .இத்தனை பரம்பரையாக வாழையடி வாழையாகக் குலதெய்வச் சிலையை மீட்கப் போராடி, இந்தத தலைமுறையில்தான் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது . அந்த முன்னாள் ராணுவ அதிகாரியும்(அழகம் பெருமாள்) பாண்டிய பரம்பரையில் வந்தவர்தான் . மதுரையில் இருந்து வந்த அந்த எடுபிடிக் கும்பலின் முக்கிய இளைஞன் (கார்த்தி)முற்பிறவியில் சோழ நாட்டோடு சம்மந்தப்பட்டவன் . தொல்பொருள் அதிகாரியைத் தவிர அவள் மகள்( ஆண்ட்ரியா) கூட ஒருவாறு பண்டைச் சோழ நாட்டோடு சம்மந்தப்படுகிறார்கள்.

மீண்டும் போர் ...

இதில்தான் ஈழப் போராட்டத்தை குறியீடாக , ஆனால் அழுத்தமாகச் சொல்லி கலை இமயமாய் உயர்ந்து விட்டார் செல்வராகவன்.

ஆனால் அதற்கும் முன்பே படத்தில் சிலாகிக்க எண்ணிலடங்கா விசயங்கள் உண்டு

வெற்றிகரமாக ஓடிய ஒரு பழைய படத்தின் பெயரை அல்லது பாடலை எடுத்துக் கொண்டு அந்தப் பழைய படம் சம்மந்தப் பட்ட யாருக்கும் எந்த விதத்திலும் ஒரு மரியாதைக்குக் கூட நன்றி சொல்லாமல் , அந்தப் பழைய படம் பற்றியும் பழைய கலைஞ்ரகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்கள் போல புதுப் படத்தை எடுத்து முடித்து விடும் படைப்புச சுரண்டல் பேrவழிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது .

பழைய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம் பெற்ற "அது அந்தப் பறவை போல பாடலை செல்வராகவன் இந்தப் புதிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக ஒரு கண்ணியமான பாணியில் ரீமிக்ஸ் செய்துள்ளார் .பாட்டில் எம்.ஜி.ஆர இருக்கிறார் . டி.எம் .எஸ் இருக்கிறார் .விஸ்வநாதன் இருக்கிறார். எந்தப் பழைய கலைஞரும் புறக்கணிக்கப் படவில்லை . கொத்து பரோட்டா போடப் படவில்லை.செல்வராகவனின் கருத்து நேர்மை அபாரமானது .


மணிபல்லவம், கபாடபுரம் போன்ற சரித்திர நாவல்களில் நாம் படித்துப் பிரம்மித்த சூரிய ஒளி நிழல் பாதை அற்புததத்தை இதில் நடராஜப் பெருமான் நிழலாகக் காட்சி வடிவத்தில் பார்க்கும்போது ஏற்படும் பிரம்மிப்பு ....! அதே போல் காந்தளூர்ச்சாலை வரலாற்று நாவலில் நாம் படித்த கவண்கல் தொழில் நுட்பம் இங்கே காட்சியாக.!
இப்படியாக பழந்தமிழனின் அறிவியல் அறிவை இன்றைய சினிமாவின் மூலம் உலகின் முன் கம்பீரமாய்க் கொடுத்திருக்கும் செல்வாவுக்கு திருஷ்டி சுற்றிப் போடலாம்.ஷாட் அமைப்பில் , ஃபிரேமிங்கில் ஹாலிவுட்டுக்கு வகுப்பெடுத்திருக்கிறார் செல்வா.

ஆனால் இது எல்லவற்றையும் விட... ஈழத் தமிழனின் போராட்டத்தை இதில் புகுத்திய விதம் பரணி பாடற்குரியது .

காட்டில் காட்டும் சோழ சாம்ராஜ்யம் பேசும் பதினெட்டாம்(பதினான்காம்?) நூற்றாண்டுத தமிழ் உரையாடல்கள்....அந்த உரையாடல்களில் ஈழத் தமிழின் பேச்சுத் தொனியையும் பல ஈழத் தமிழ் வார்த்தைகளையும் குழைத்தது ....( கதை நடப்பது ஒரு தீவில் உள்ள காட்டில்தான் .தவிர , தீவில் வாழத் துவங்கிய முதல் மனித இனமாகவும் இந்தச சோழ சமூகம் காட்டப் படுகிறது
.அதனால்தான் மொழியில்லாத நர மாமிசம் தின்னும் ஆதிவாசிகள் இவர்களுக்கு விசுவாசமாக இருப்பதாக சொல்கிறார் செல்வா) என்று அந்த சோழ சமூகத்தை ஈழ சமூகமாகவே காட்டுகிறார் செல்வா.

அப்படியானால் எதிரியான சிங்களனைப் பாண்டியனாகக் காட்டுவது ஏன் என்று கேள்வி வரலாம

அதற்குப் பதில் சொல்வதற்கு முன் கொஞ்சம் வரலாறு .
முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் பாண்டிய மன்னனின் மணிமுடியைச் சிங்கள மன்னன் ஒருவன் அபகரித்துச் சென்றதாகவும் பகை அரசன் என்றாலும் ஒரு தமிழ் அரசனின் மணிமுடியை சிங்களன் கவர்ந்து சென்றதற்காக ராஜராஜ சோழன் வருந்தியதாகவும் தந்தையின் ஆசைப்படி பின்னாளில் ராஜேந்திர சோழன் அந்த சிங்கள மன்னனை வீழ்த்தி அதை மீட்டு வந்ததாகவும் வரலாறு சொல்கிறது .

அதை சற்று மாற்றி குலதெய்வச் சிலை ......சோழன் பாண்டியன்... என்று கதை அமைத்து இருக்கிறார் செல்வா. நேரடியாகச் சொன்னால் நமது தணிக்கைத் துறை அனுமதிக்காதே. தவிர சிங்களனுக்கு மாமனாராக இருக்கிற நமது அரசியல்வாதிகளும் சுய நல அதிகாரவர்க்கமும் பிரச்னை செய்யுமே.

தவிர இன்றைய சுழலில் பாண்டியன் என்ற குறியீடு ஒரு விதத்தில் நம் தமிழனுக்கே துரோகியாக இருக்கும் நம்மூர்த் துரோகிகளையும் குறிக்கிறதே.

அப்படியானால் பாண்டியனின் குலதெய்வச் சிலையை சோழன் திருடினான் என்று கூறுவது.. சோழனின் மீதுதான் தவறு என்ற அர்த்தம் வரும்போது அது ஈழப் பிரச்னையில் தமிழர்கள்தான் தவறானவர்கள் என்று கூறுவது போல வருகிறதேஎன்று தோன்றலாம்.

இல்லை.

சிலை திருடப்பட்ட விசயம் சொல்லப்படும் வரை கதையாகப் பயணிக்கும் படம் அதன் பிறகுதான் குறியீடாகப் பயணிக்கிறது .இப்படியெல்லாம் குழப்பாமல் நேரடியாகச் சொல்லி இருந்தால் அடுத்து செல்வராகவன் தமிழ்இன உணர்வோடு சொல்லியிருக்கும் காட்சிகளைச் சொல்ல இங்குள்ள சிங்கள அடிவருடிகள்
அனுமதிக்க மாட்டார்கள் . தவிர சிலை கவர்தல் என்பது அவர்கள் செய்த தவறுக்குப் பழிக்குப் பழியாகத்தான் என்ற புரிதலும் வருகிறது .

அபபடி என்ன சொல்லி இருக்கிறார் செல்வா என்கிறீர்களா?
ஈழத் தமிழினத்தின் குறியீடாக வரும் சோழ தேவனை(ரா.பார்த்திபன்) , சிங்கள இனக் குறியீடாக வரும் பாண்டிய இளவரசியான( பெண் அதிகாரி) நம்ப வைத்துக் கழுத்தறுக்கிறாள்.தியாக உணர்வோடு போரிடும் சோழர்களை பாண்டிய ஆட்கள் துப்பாக்கி ,
பாராசூட், கனரக ஆயுதம் உள்ளிட்ட வகையில் குழுக் குழுக்களாக வந்து
கொல்கிறார்கள்.(கவனிக்க: ஏழு நாட்டு ராணுவம்). சோழர்கள் வீரப் போர் தியாகப் போர் புரிகிறார்கள்(விடுதலைப் புலிகளைப் போல)

கடைசியில் சோழர்களைத் தோற்கடிக்கும் நவீன கும்பல் அப்பாவி ஆண் பெண்களைக் கட்டிவைத்து கும்பல் கும்பலாக அடைத்து வைத்து
கொடுமைப் படுத்துகிறது(முள் வேலி முகாம்கள்...!புரிகிறதா? ஆரம்பத்திலேயே சோழ தேவனிடம் ஒரு பெண் ஈழத் தமிழ் வார்த்தைகளும் தொனியும் கலந்த பண்டைத் தமிழில் முறையிடுவாள் "ஒழுங்கா சோறு கிடைக்காதது மட்டுமில்ல....மலங்கழிக்கக்
கூட வழியில்லாமல் கஷ்டப் படுறோம்"என்று)

அப்பாவிப் பெண் களைக் தனித்தனியாக ஒரு கும்பலே தூக்கிச் சென்று
கூடாரங்களில் வைத்துக் கற்பழிக்கின்றனர்(சொல்லவும் வேண்டுமோ?) இறுதியில் சோழ தேவன் ஒரு நீர் நிலை ஓரத்தில் செத்து விழுகிறார்(பிரபாகரன் உடல் என்று சிங்கள ராணுவம் காட்டிய உடல் நீர் நிலை அருகில்தானே கிடந்தது) சோழ தேவனின் குடும்பம் அழிக்கப் பட கடைசி மகனை மட்டும் அந்த மதுரைக்கார ஆனால் முற்பிறவியில் சோழனாக இருந்த இளைஞன் காப்பாற்றத் தூக்கிக் கொண்டு ஓட , சோழனின் பயணம் தொடரும் என்று படத்தை முடிக்கிறார் செல்வராகவன்.

தவிர , பிரபாகரனின் குறியீடாக வரும் சோழ தேவனின் பணிப்பெண்டிரின் முகத் தோற்றமும் பாவனைகள் பெண் விடுதலைப் புலிகளின் சாயலை ஒத்துள்ளது.

ஒரு திரைப்படம் என்ற வகையில் இதை அணுகினால் வழக்கமான
செல்வராகவன் படத்துக்கே உரிய சில ஆபாச , கழிவுக் காட்சிகள் இதிலும் உண்டு.சில லாஜிக் மீறல்கள் கூட இருப்பதாக வாதிடலாம்.

வியட்னாம் பக்கத்தில் சோழ சாம்ராஜ்யம் என்று காட்டுகின்றனர். சோழன் எப்போது அங்கே போனான்? என்று ஒரு கேள்வி
ஜப்பானில் ஆஸ்திரேலியாவில் எல்லாம் சோழர் காலத்து மிகப் பிரம்மாண்டமான கோவில் மணிகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும்போது வியட்னாம் சோழனுக்கு சுண்டைக்காய்தான். காரணம் இங்கே பிராமணர்களையும் சமஸ கிருதத்தையும் ஆதரித்த
ராஜராஜசோழன் வரலாறு மட்டுமே பாதுகாக்கப்பட்டது . அதற்கு 800 ஆண்டுகளுகு முன்பு மாபெரும் விஞ்ஞானச் சாதனையாக கல்லணை கட்டிய கரிகாலச் சோழனின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப் பட்டது . ஆக வியட்னாம் குறிப்பிடப்படுவது பிரச்னை இல்லை.

இன்றைக்கும் அங்கு வாழ்கிற அந்தச் சோழர்கள் பச்சை மாமிசம் சாப்பிடுவதாகக் காட்டுவது நியாயமா? என்றொரு கேள்வி .
அங்குள்ள காட்டுமிராண்டி மக்களோடு கலந்து அவர்களை விசுவாசியாக மாற்றிவாழும் மக்களுக்கு அந்தப் பழக்கம் இருப்பதாகக் காட்டுவது பெரிய குற்றமில்லை..

கடைசியில் விமானம் மூலம் போய்த் தாக்கும் நவீன பாண்டிய வம்சம், ஆரம்பத்தில் கால் நடையாகப் போய் ஏன் இவ்வளவு கஷ்டப் பட வேண்டும்? இந்த சாட்டிலைட் யுகத்தில் ஒரு காரின் எண்ணையே சாட்டிலைட்டிலிருந்து பார்க்க முடியும் எனும்போது ஒரு சமுதாயம் வாழ்வதை கண்டு பிடித்து விமானத்திலேயே போய்த் தாக்கலாமே என்று கூட கேட்கிறார்கள் .இதற்கும் கூட பதில் சொல்லலாம் .ஆனால்
இவ்வளவு லாஜிக் பார்த்தால் படம் எடுக்க முடியாது சினிமா எடுக்க முடியாது என்ற பதிலே இங்கு போதுமானது .

திடீரென்று அமானுஷ்யம் போல காட்சிகள் வந்து குழப்புகிறது என்கிறார்கள் .
சும்மா இருக்கும் உங்களை நைட்ரஸ் வாயுவை முகர வைத்து விழுந்து விழுந்து சிரிக்க வைக்க முடியும் என்பது விஞ்ஞானம் என்று ஒத்துக் கொள்ளூம் நாம் ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நிற்கும் நிலையில காது கிழியும் ஒலிகளை ஏற்படுத்தி ஏன் பைத்தியமாக்க முடியாது?

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு பூச்சே இல்லாமல் கற்களை மட்டும் அடுக்கி கல்லணை கட்டிய இனத்தில் .... பின்னாளில் மறைந்து போன தொழில் நுட்பங்கள் எத்தனை எத்தனையோ.அப்படி ஒரு தொழில் நுட்பமாகத்தான் இதைப் பார்க்க வேண்டும் .

இது ஒரு வரலாற்று விஞ்ஞான அமானுஷ்ய நுட்பப் படம் .

தவிர , இத்தனைக் குழப்பங்களையும் கொடுத்தால்தான் படத்தில் காட்டப் படும் ஈழ ஆதரவை சேதாரமில்லமல் வெளிப்படுத்த முடியும்.
இல்லாவிட்டால் நமது தணிக்கைப் பிரிவும் காவடி தூக்கு அரசியல் வியாதிகளும் சும்மா இருக்க மாட்டார்களே

படத்தில் எல்லாக் கலைஞர்களும் வியப்புக்குரிய உழைப்பை வழங்கி இருந்தாலும் ......

வருடத்துக்கு பத்துப் படங்களில் நடித்து கோடிகளால் உண்டியலை நிரப்பிக் கொண்டு போகும் நமது நடிகைகளுக்கு மத்தியில் , இந்தப் படத்தின் தரத்துக்கு மரியாதை தந்து கடந்த இரண்டு வருடங்களாக வேறு எந்தப் படத்தையும் ஒத்துக் கொள்ளாமல் இந்தப் படத்துக்கு முழு உழைப்பையும் வழங்கிய நடிகை ரீமாசென்னுக்கு ஒரு கம்பீரமான கைகுலுக்கல் .

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் பற்றி உலகமே சிலாகிக்கிறது . அவதாரில் பழங்குடி மக்களை நவீன நயவஞ்சக மனிதன் அழிக்க முயல்வதும் அதை எதிர்த்து அவர்கள் வாழ முயல்வதும் நவீன மனிதனில் ஒருவனே அதற்கு உதவுவதும் கதை .

ஆயிரத்தில் ஒருவனில் பழங்குடிக்குப் பதிலாக சோழ (ஈழ) இனம்.

அவதாரில் ஒரு நவகால மனிதனே பழங்குடி மக்களின் நியாயம் உணர்ந்து அவர்களுக்கு உதவுகிறான்.

இதில் மதுரைக்கார இளைஞன்.

அதில் போலவே இதிலும் ஒரு தனித்துவ சமுதாயம் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது .

அவதார் கற்பனைக் கதை ..
எனவே அதில் பழங்குடி மக்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனால் இந்த இரண்டாம் ஆயிரத்தில் ஒருவன் படம் , கடந்த மே மாதம் முதல் ஈழத்தில் ரத்தமும் சதையுமாக நாம் பார்த்து வரும் தியாக வரலாறு.

அவதார் படத்தின் கதை என்னவென்றே தெரியாத காலத்தில் அப்படி ஒரு கதையை இங்கே செல்வா உருவாக்கியிருக்கிறார் .

வரைகலைத் தொழில் நுட்பம் , முப்பரிமாணத் தொழில் நுட்பம் என்று பார்த்தால் அவதார் சிகரம் தொட்ட படம். ஆனால் கருத்தியல் என்று பார்த்தால் ஆயிரத்தில் ஒருவனின் கால் தூசுக்கு ஆகாது அவதார்.

ஆனால் ஒரு கற்பனைக் கதையை , கோக்கும் பீட்ஸாவும் விழுங்கிக் கொண்டு கைதட்டி ரசித்து வசூலைக் கொட்டும் தமிழன், ஆயிரம் பிரச்னைகள் வரும் சூழலில் நேக்காக ஈழப் போராட்டத்தை திரையில் பதித்திருக்கும் ஆயிரத்தில் ஒருவனைப் பார்த்து 'ஒண்ணுமே புரியல ' என்று குறை சொல்லிப் புறக்கணித்து விட்டுப் போகிறான், என்னமோ எல்லா ஆங்கிலப் படங்களையும் (தமிழில் டப் செய்தாலும்) புரிந்துதான் பார்ப்பது போல.
33 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட இந்தப் படம் 15 கோடி ரூபாய் வசூலிக்கும் என்கிறார்கள்.இந்த நல்ல படத்துக்கு பூட்ட காசாவது வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறது மனம் .

இந்தப் படத்தை இதே பட்ஜெட்டில் ஆங்கிலத்தில் ( இண்டியன் இங்லீஷிலாவது) எடுத்து அப்படியேவோ அல்லது டப் செய்தோ வெளியிட்டிருந்தால்... அதே கோக்கும் பீட்ஸாவுமாக வந்து பார்த்து புரியாத இடங்களில் வழக்கம் போல சிரித்தோ கைதட்டியோ 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........' என்று சொல்லி இருப்பான் நம்ம
தமிழன் , மன்னிக்கவும் தமிளன் !

இந்தப் படம் தமிழனுக்குதான் புரியாது . மற்றவர்களுக்குப் புரியும்.

உணர்வு இருந்தால் படத்தின் அடிப்படையாவது புரியும்.வரலாறு நிறைய
அறிந்து திரைப்படத் தொழில் நுட்பமும் புரிந்தால் ரொம்பப் பிடிக்கும்.
என்னதான் குறைத்து மதிப்பிட்டாலும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் தமிழ் திரை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான படம்.

படத்தில் பல குறைகள் உள்ளன என்பதை (ஒரு வாதத்துக்காக ) ஒத்துக் கொள்ளும் சூழல் சில இடங்களில் வந்தால் கூட....ஈழப் போராட்டத்தை வெள்ளித் திரையில் பல இடர்ப்பாடுகளையும் மீறி அழுந்தப் பதித்திருக்கும் செல்வராகவனுக்கு ஒரு வீர வணக்கம்


0 comments:

Post a Comment