Tamil Radios by Puthiyayukam

Tamil Radios 50+ Online Radio

CHOOSE YOUR SONGS AND RADIO

Submit your Radio/FM to puthiyayukam@gmail.com

ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு

நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே


மு.கு

ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகின்றேன் இது விமர்சனமோ அல்லது திறனாய்வோ அல்ல. இப்படியான அற்புதமான சினிமாவை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒரு விமர்சகனும் அல்ல. அத்துடன் இந்தச் சினிமா பற்றிய புரிதல்களில் பல இடங்களில் இடைவெளிகளும் எனக்கு ஏற்பட்டன. வரலாறு பற்றிய போதிய அறிவும் இல்லாததால் இந்த அற்புதப் படைப்பிற்கான விமர்சனமாக இதனை ஒருபோதும் எடுக்க வேண்டாம்...இது ஒரு குறிப்பு மட்டுமே

0

இன்று அண்மையில் வந்த, செல்வராகவன் இயக்கத்தில் உருவான அற்புதமான படைப்பான 'ஆயிரத்தில் ஒருவன்' எனும் புதிய திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்த்தேன். வழக்கமான சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி, மிக மிக வேறுபட்ட அனுபவத்தையும், நுண்ணுணர்வுகளால் புரிந்து கொள்ளப்பட்டு எழுத்தால் பகிரப்பட முடியாத உணர்வுகளையும் இந்தப் படம் எனக்கு தந்தது. அத்துடன் படத்தின் மையக்கருத்தும், படத்தின் முடிவும் முள்ளிவாய்க்காலுடன் உறைந்து போயிருக்கும் ஈழப்போராட்டத்தைப் பற்றிய நுணுக்கமான ஒரு பதிவாகவும், அதன் எதிர்காலப் போக்குப் பற்றிய நூலிழை எதிர்வு கூறலாகவும் அமைந்து இருக்கின்றது

இந்தக் குறிப்பில் ஆயிரத்தில் ஒருவனின் கதையை எழுதக்கூடாது என்று உத்தேசித்து ஆரம்பிக்கின்றேன். 

1.

போரும் அமைதியும் எனும் ரொல்ஸ்ரோயின் காவியத்தின் மையக்கருத்து 'போர் என்றும் ஓய்வதில்லை' என்றே சொல்வேன். யுத்தம் என்பது இன்றோ நேற்றோ தொடங்குவதில்லை. அதன் காரணங்கள் நீண்ட வரலாறு கொண்டவை. யுத்தம் ஒன்று சமூகங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ இடையில் ஆரம்பித்தால் அதற்கான காரணங்கள் ஒரு நீண்ட வரலாற்று பின்னணியை கொண்டு இருக்கும். அதே போல் எந்த யுத்தமும் முடிவடைவதும் இல்லை. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு தலைமுறைகளால் வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு யுத்தம் இன்று தவிர்க்கப் பட்டால் அது நாளையோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ அல்லது ஒரு ஆயிரம் வருடத்தின் பின்னோ இடம் பெறவே செய்யும். ஆனால் யுத்தம் என்பது மானுட வரலாற்றினை முன்னோக்கவும், இழுத்துக் கட்டி வைத்திருக்கவும் என்று எப்பவும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. போரற்ற வாழ்வு எது? போரற்ற தமிழன் வரலாறு தான் எது? 

2.

தஞ்சையில் பாண்டிய மன்னனால் சோழ பேரரசு அழிக்கப்படுகின்றது. அழிக்கப்பட்ட பேரரசில் இருந்து தப்பிக் கொண்ட இளவரசனும் இன்னும் சிலரும் பாண்டிய பேரரசின் சின்னமான சிலையொன்றுடன் தப்பி, தேசங்கள் கடந்து யாருமற்ற தீவொன்றில் மறைந்து விடுகின்றனர். தான் தன் பரம்பரை எல்லாம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண்ணை விட்டு அகல்கின்றான் சோழ பேரரசன். அந்தச இளவரசனையும், சின்னத்தையும் தேடி பாண்டிய பேரரசின் பரம்பரை பல நூற்றாண்டுகள் கடந்தும் வெறி கொண்டு அலைகின்றது. 

நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே

***************
அடிமையாக வாழ்ந்த தமிழன், ஈழம் எனும் சிறு பகுதியில் மானமுடன் வாழ ஆசைப்படுகின்றான். வரலாறு சப்பித்துப்பிய எச்சமாய் போனவன் தனக்கென்ற தேசம் பற்றி கனவு கொண்டும், என்றாவது ஒரு நாள் பெரும் தேசம் புகுவான் என்றும், தன் எல்லா சக்தியும் கொண்டு சிறு தேசம் கட்டி, உயிரை அடை காக்கின்றான். எதிரியால் அபகரிக்கப்பட்ட நிலம் எங்கும் மீண்டும் தன் புலிக்கொடி பறக்கும் என்று காத்திருக்கின்றான்
*****************

பாண்டிய பரம்பரை நெஞ்சில் வஞ்சினம் கொண்டு சோழனை தேடுகின்றது. தப்பிய இளவரசனின் பரம்பரையால் என்றாவது தன் பேரரசிற்கு ஆபத்து என்று வெறி கொண்டு அலைகின்றன. ஆண்டுகள் மாறுகின்றன, களம் மாறுகின்றது, வரலாறும் மாறுகின்றது. ஆனால் தாய் நிலம் இழந்தவனும், அபகரித்தவனும் மாறும் களம் தமக்கானதாய் கனிய காத்திருக்கின்றன. 800 ஆண்டுகள் கழிந்தும் போர் மட்டும் ஓயாமால் வெவ்வேறு களங்களினூடும், தளங்களினூடும் பயணம் செய்கின்றது. நிலம் இழந்தவனும், தன் இன மானச் சின்னத்தை எதிரியிடம் இழந்தனும் வெறி கொண்டு தம் பக்க நியாயங்களுக்காக காத்திருக்கின்றன


"தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே.. அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே.. அழாதே
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே.. அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே.. அழாதே"

சோழ பரம்பரை காத்திருக்கின்றனர்... தாங்கமுடியா துயர்களை தாங்கி விடிவு ஒன்றுக்காய் மட்டுமே ஒரு சிறு நிலமதில் உயிர் சுமக்கின்றனர். அந்த நிலத்தின் சட்டங்கள் வேறு, நியாயாதிக்கங்கள் வேறு, பண்பாடு வேறு. ஆனால் அனைத்தும் மீண்டும் தம் சுதந்திர வாழ்வு பற்றிய ஒற்றைப் புள்ளியில் சுழல்கின்றன. 


பாண்டியனின் புதிய பரம்பரையின் ஒரு வித்து சோழனின் இடம் பற்றி அறிகின்றது, திட்டமிடுகின்றது, தேடுகின்றது, தேடி இறுதியில் பல பொறிகள் (Traps)கடந்து அவனை வீழ்த்த முனைகின்றது, 800 வருடங்களாக காத்திருந்த வெறியும், நிலம் மீள காத்திருந்த கனவும் சந்திக்கின்றன. அனைத்தையும் இழந்த சோழ பரம்பரை தனக்கிருக்கும் குறைந்த வளத்துடன் போரிடுகின்றது. 

ஈற்றில், ஆக்கிரம்மிப்பு வெறியும், பலமும் கொண்ட பாண்டிய பரம்பரை நவீன ஆயுதங்களின் துணையுடன் மீண்டும் சோழனை வீழ்த்துகின்றது. எவரின் உதவியும் அற்று (அல்லது ஒதுக்கி) தன் சொந்த கால்களின் பலத்துடன் மட்டுமே நின்ற சோழப்பரம்பரை மீண்டும் தோற்கின்றது. தலைமை தாங்கிய அரசன் படுகொலை செய்யப்படுகின்றான். பலர் தம் குரல்வளையை அறுத்து தற்கொலை செய்கின்றனர். பலர் சிறை பிடிக்கப்படுகின்றனர். பெண்கள் வல்லுறவுக்குள்ளாகின்றனர். அவர்களை காக்க முனையும் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்

மீண்டும் அந்தப் சோழ பரம்பரையில் ஒருவனும், அவனுடன் கூடவே சிலரும் தப்பிக்கின்றனர்.. மீண்டும் சோழனின் பயணம் தொடர்கின்றது..தான் இழந்த நிலம் மீட்கும் வரை ஓயாது என்று அந்தப் பயணம் தொடர்கின்றது. தப்பிய அவனைத் தேடி பாண்டிய வம்சத்தின் துரத்துதலும் தொடர்கின்றது


**************
முள்ளிவாய்க்காலில் இந்தத் தலைமுறையின் விடுதலை வேட்கை பலம் கொண்டவர்களால் அடக்கபடுகின்றது. ஆனால் போர் மட்டும் ஓயவில்லை. இன்னொரு களம், இன்னொரு காலம் நோக்கி நகர்கின்றது; தமிழர் தன் சுதந்திரத்தினை அடையும் வரையும் எதிரி தன் இருப்பை சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவும் வரைக்கும் இந்தப் போர் ஓயப்போவதில்லை

****************

3

இப்படி ஒரு சினிமா தமிழில் இது வரைக்கும் வரவில்லை என்றே சொல்வேன். முன் பாதி முழுதும் மாயாஜாலம் நிறைந்த (தமிழர்களின் மாயாவாதம்) காட்சிகள், பின் பாதி மானுடம் முழுதும் நிரம்பி இருக்கும் உயிர் வாழ்தலுக்கான போட்டி. போர் என்பது மனித வாழ்வில் பிழைத்து இருக்க (Survival) தவிர்க்க முடியாதது. 99% அடிமை உணர்வில் ஆட்கொண்டு பணிந்து போனாலும் மிச்சம் இருக்கும் 1% சுதந்திரம் பற்றி தன்னுணர்வு கொண்டு தன் சமூக விடுதலைக்காக தொடர்ந்து போர் செய்ய முனையும் என்பதை சினிமாவில், அதுவும் தமிழ் சினிமாவில் பதிவு செய்த திரைப்படம் இது. சக காலத்தில் நிகழ்ந்த பெரும் போராட்டம் ஒன்றின் உறைநிலையை (அல்லது தற்காலிக முடிவை) கருப்பொருளாக்கி சினிமா தந்த செல்வராகவன் பாராட்டுக்குரியவராகின்றார். ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் Perfection என்பது அதிசயிக்கத்தக்கது. எல்லாக் காட்சிகளிலும் Frame இற்குள் அகப்பட்ட அனைத்தும் முழுமையாக இருக்கின்றது. சின்ன சின்ன விடயங்களில் கூட அதிக பட்ச அக்கறை காட்டியிருப்பதும் உணரக்கூடியதாக இருக்கின்றது

4

ஆனால் இந்தத் திரைப்படம் எத்தனை பேரைச் சேரும் என்பது கவலைக்குரிய கேள்வி. நான் இன்று பார்க்கும் போது திரையரங்கு எங்கும் சலிப்பான குரல்களையும், 'எப்படா படம் முடியும்' என்ற சில குரல்களையும் கேட்க முடிந்தது. வேட்டைக்காரன் போன்ற நாலாம்தர சினிமாக்களை வரவேற்கும் ஒரு சமூகத்தில் இத்தகைய படங்கள் வெற்றி பெற்றால், அதுவே பெரும் சாதனை

=========================================================

பி.கு 1:
இதனை இந்தப் பகுதியில் இணைத்தது அனைவரும் (ஆகக் குறைந்தது ஈழத் தமிழர்கள் ) கண்டிப்பாக பார்க்க தூண்ட வேண்டும் என்பதற்காகவே. 

பி.கு 2:
திரைப் படத்தின் இறுதியில், கொல்லப்பட்ட தலைவனின் உடலை மிச்சமிருப்பவர்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அடக்கம் செய்வதை காணும் போது, நெஞ்செங்கும் ஒரு குற்ற உணர்வு வந்து அடைக்கின்றது

0 comments:

Post a Comment